அண்மையில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியின்போது தம்மீது பணமழை பொழிந்ததைச் சமூக ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார் இந்தியாவின் குஜராத்தி மொழி நாட்டுப்புறப் பாடகி ஊர்வசி ராதாதியா.
மேடையெங்கும் ஏற்கெனவே பணத்தாள்கள் சிதறிக் கிடக்க, ஊர்வசி தொடர்ந்து பாடுவதை அந்த இன்ஸ்டகிராம் காணொளி காட்டுகிறது.
மற்ற இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து ஊர்வசி பாட்டைத் தொடர, அவருக்குப் பின்னால் இருந்து வரும் ஒருவர், எஃகுப் பாத்திரத்தில் குவிக்கப்பட்டிருந்த பணத்தாள்களை அவர்மீது கொட்டுகிறார். பின்னர் அம்மனிதரே 500 ரூபாய் தாள்களை ஒவ்வொன்றாக அவர்மீது பொழிவதையும் காணொளி காட்டுகிறது.
மேடையின் கீழே இருந்தபடியும் பலர் ஊர்வசிமீது பணத்தாள்களை இறைத்தபடி இருந்தனர்.
இதனையடுத்து, பணத்தாள்களைக் கொட்டி ரசிகர்கள் தம்மீது காட்டிய 'விலைமதிப்பில்லா அன்பிற்கு' நன்றி தெரிவித்துக்கொண்டார் ஊர்வசி.
இந்தக் காணொளியை 250,000க்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். அவர்களில் பலரும் பணமழை பொழிந்ததை வரவேற்க, சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

