புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தங்களது போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அரசுக்கு ஆறு புதிய நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள நாற்பது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லி மாநில எல்லையில் நடைபெற்றது என்றும் அதில் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதாகவும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான பல்பில் சிங் ரஜேவால் தெரிவித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பிற கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மின்சார மசோதாவை ரத்து செய்ய வேண்டும், லக்கிம்பூர் கேரி வன்முறைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் இதற்கான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
போராட்டத்தில் பலியான 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பயிர்க்கழிவுகள் எரித்ததற்காக போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக பல்பில் சிங் ரஜேவால் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து கூட்டத்தொடரின் முதல் நாளன்றே புதிய சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி, ஓராண்டு நிறைவடையும் நாளான வரும் 26ஆம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும் அனைத்து நாள்களிலும் ஐநூறு விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் டிராக்டர் பேரணி செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் இம்முடிவு பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

