போபால்: அன்பு மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் எழுப்பிய தாஜ்மகால், காதல் சின்னமாகப் போற்றப்படுகிறது.
இந்தியாவின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள அந்த நினைவுச் சின்னத்தைப் போலவே, தம் அன்பு மனைவிக்கு வீடு கட்டித் தந்துள்ளார் மத்தியப் பிரதேச மாநிலம், புர்கான்பூரைச் சேர்ந்த ஆனந்த் சோக்சி.
நான்கு படுக்கையறை கொண்ட இவ்வீடு, முழுக்க முழுக்க தாஜ்மகாலைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டி முடிக்க மூவாண்டுகள் ஆயிற்று.
இவ்வீட்டைக் கட்டியபோது பல சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார் அதனைக் கட்டிய பொறியாளர்.
இதற்காக தாஜ்மகாலுக்கு நேரில் சென்று, அதனை அணுக்கமாக ஆராய்ந்து வந்தார் அவர்.
அத்துடன், வீட்டின் உள்வடிவ அமைப்பிற்காக மேற்கு வங்க மாநிலம் மற்றும் இந்தூர் நகரைச் சேர்ந்த கலைஞர்களின் உதவியையும் அவர் நாடினார்.
வீட்டின் குவிமாடம் 29 அடி உயரம் கொண்டது. தாஜ்மகாலில் இருப்பதைப் போன்ற தூண்களும் நிறுவப்பட்டுள்ளன.
வீட்டின் தளம் ராஜஸ்தான் மாநிலம், மக்ரானா நகரில் உருவாக்கப்பட்டது. வீட்டின் அறைகலன்கள் மும்பை நகரைச் சேர்ந்த கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
வசிப்பறை, கீழ்த்தளத்திலும் மேல் தளத்திலும் தலா இரு படுக்கையறைகள், நூலகம், தியான அறை என இவ்வீடு மிகவும் ஆடம்பரமாகவும் மிகுந்த பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, உண்மையான தாஜ்மகால் இரவில் எப்படி ஒளிருமோ, அதேபோன்று ஒளிரும் வகையில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மின்னொளி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.