லக்னோ: நாடு முழுவதும் காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் மீதான போலிசாரின் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 56ஆவது காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், காவல் துறைக்கு உதவும் வகையில் உயர் ஆற்றல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"கடந்த 2014ஆம் ஆண்டு நவீனகாவல் துறை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை காவல்துறை தலைவர்கள் மேம்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும்படி செயல்படுத்த வேண்டும்.
"மக்கள் நலனுக்காக ஆளில்லா வானூர்தி தொழில்நுட்பத்தை நேர்மறையான செயல்களுக்கு போலிசார் பயன்படுத்தலாம். காவல்துறை எதிர்கொள்ளும் வழக்கமான சவால்களை எதிர்கொள்ள தேவைப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் உயர் தகுதி வாய்ந்த இளையர்களை ஈடுபடுத்தலாம்," என்றார் பிரதமர் மோடி.