செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
857732b2-c5a1-499d-b9a6-2aba575136a3
-

ஆர்யன் கான் பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

மும்பை: நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யனுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆர்யன் கான் நேரடியாகப் போதைப் பொருளைக் கையாண்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால் அவருக்குப் பிணை வழங்கப்படுகிறது என மும்பை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன்பு, இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாகவும் அதன் பிறகே மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதான்கோட் ராணுவ மையம் அருகே கையெறி குண்டு வீச்சு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், பதான்கோட் ராணுவ மையத்துக்கு அருகே கையெறி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் கையெறிகுண்டை வீசியதாகத் தெரிகிறது. இதற் கிடையே, 40 பாதுகாப்பு வீரர்களைப் பலி கொண்ட புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் இணைய வர்த்தகத் தளமான அமேசான் மூலம் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுபோன்ற தளங்களில் வெடிபொருள்களை விற்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

பாலியல் துன்புறுத்தல்: அமைச்சர் கருத்து

புதுடெல்லி: ஏழைக் குடும்பங்களில் மட்டுமே பெண் குழந்தை களுக்குப் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பதாக பொது வாக ஒரு கருத்து நிலவுகிறது என்றும் அது உண்மையல்ல என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். வசதி படைத்த குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக அவர் குழந்தைகள் உரிமை குறித்த பயிற்சி முகாமில் பேசுகையில் குறிப்பிட்டார்.

போதைப்பொருள்: நைஜீரியர் கைது

மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியில் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. இது தொடர்பாக நைஜீரிய குடிமகன் ஒருவர் கைதானார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.