இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு 1947ல் பாகிஸ்தான் தனி நாடாக்கப்பட்டபோது பிரிந்த நண்பர்கள் இருவர், 74 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரில் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சிமிக்க தருணமாக அமைந்தது.
‘கர்த்தார்பூர் பயணத்தடம்’ என்ற விசா தேவையற்ற சமயப் பயணம் மூலமாக, பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்த்தார்பூர் சீக்கியக் கோவிலுக்குச் சமயக் கடமைகளை நிறைவேற்றச் சென்றார் இந்தியாவைச் சேர்ந்த சர்தார் கோபால் சிங், 94.
அவ்வேளையில், நீண்டகாலத்திற்குமுன் பிரிந்துபோன முகம்மது பஷீர், 91, என்ற தம் நண்பரை மீண்டும் சந்திப்போம் என்று அவர் நினைத்திருக்கவில்லை. திரு பஷீர், பாகிஸ்தானின் நரோவால் நகரில் வசித்து வருகிறார்.
பழைய நண்பர்கள் ஒன்றிணைந்ததையும் தங்களின் சிறுவயது நிகழ்வுகளை அவர்கள் நினைவுகூர்ந்ததையும் பாகிஸ்தானின் ‘டான்’ ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது நண்பர்கள் இருவரும் இளம் வயதினர். அப்போது, இருவரும் சேர்ந்து பாபா குருநானக் சீக்கியக் கோவிலுக்குச் சென்று வந்ததையும் ஒன்றாக இணைந்து உணவு, பானம் அருந்தியதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
பழைய நண்பர்கள் இருவரின் சந்திப்பை அறிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஊடகவாசிகள், திரைப்படத்தில் நடப்பது போலவே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.