கடக் (கர்நாடகா): இந்தியாவின் கர்நாடக மாநிலம், கடக் பெட்டகிரி நகராட்சி மன்ற அலுவலகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் வந்த ஸ்ரீராம சேனா அமைப்பினர் 15 பேர், அவ்வளாகத்தின் பல பகுதிகளிலும் சிறுநீர் கழித்தனர்.
நகரிலுள்ள பொதுக் கழிப்பறைகளைப் பழுதுபார்த்து, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் இந்தப் புதுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுக் கழிப்பறைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் இல்லையேல் நகராட்சி மன்ற அலுவலகத்தில் சிறுநீர் கழிக்கும் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் ஒரு வாரத்திற்கு முன்னரே அவர்கள் கடிதம் கொடுத்தனர்.
தங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்காததை அடுத்து, அவர்கள் தாங்கள் சொன்னபடி செய்துகாட்டினர்.
காவல்துறையினர் விரைந்து வந்தபோதும், அவர்களால் ஸ்ரீராம சேனா அமைப்பினர் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க இயலவில்லை.
அதனோடு நின்றுவிடாது, இன்னும் 8-10 நாள்களுக்குள் பொதுக் கழிப்பறைகளைச் சீரமைக்காவிடில் மறுபடியும் நகராட்சி மன்ற அலுவலகத்திலும் உதவி ஆணையர் அலுவலகத்திலும் சிறுநீர் கழிப்போம் என்றும் அந்த அமைப்பினர் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
“கடக்கில் உள்ள பொதுக் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாதபடி மோசமான நிலையில் இருக்கின்றன. அதிகாரிகள் எங்களது கோரிக்கைக்குச் செவிசாய்க்காததால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,” என்றார் ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த ராஜு.
இதனையடுத்து, ஓரிரு நாள்களில் பொதுக் கழிப்பறைச் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கவிருப்பதாக நகராட்சி மன்றத்தின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.