புவனேஸ்வர்: பொதுவாக, நல்ல இசையைக் கேட்பது நோயைக் குணமாக்கும் என்று கேள்விப்பட்டதுண்டு.
ஆனால், இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தின்போது இடம்பெற்ற ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், 63 கோழிகள் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டதாக அதன் உரிமையாளர் குற்றம் சாட்டியிருப்பது புதுமையான செய்தி!
கடந்த ஞாயிறன்று நள்ளிரவு வேளையில் அந்தத் திருமண விழாவில் காதைக் கிழிக்கும் வகையில் ஒலித்த இசை, தமது கோழிப்பண்ணை வரையிலும் கேட்டதாக திரு ரஞ்சித் குமார் பாரிடா என்பவர் கூறினார்.
“சத்தத்தைக் கேட்டு கோழிகள் பீதியடைந்ததால், ஒலியளவைக் குறைக்கும்படி திருமண விழாவில் பங்கேற்ற இசைக்கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் அதனைச் செவிமடுக்கவில்லை. போதாக்குறைக்கு, மணமகனின் நண்பர்களும் என்னைத் திட்டினர்,” என்று விவரித்தார் திரு பாரிடா.
இறந்த கோழிகளை ஆய்வுசெய்த கால்நடை மருத்துவர் ஒருவர், அவை மாரடைப்பால் இறந்துபோனதாக திரு பாரிடாவிம் கூறினார். அதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாட்டாளர்கள் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, திரு பாரிடா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறை தலையிட்டதை அடுத்து கோழிகள் இறந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.
“கோழிப் பண்ணை உரிமையாளர் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று திரௌபதி தாஸ் என்ற காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அதிகமான சத்தம், பறவைகளிடம் இதயநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக விலங்கியல் பேராசிரியர் சூர்யகாந்த மிஸ்ரா, விலங்குகளின் நடத்தை குறித்து எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.