செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
13318b46-7664-49c4-bf93-1b7da86c3848
-

உத்தரப் பிரதேசத்தில் 35% நடப்பு எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள நடப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 140 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 35% ஆகும். அதிகபட்சமாக பாஜகவின் 304 எம்எல்ஏக்களில் 106 பேர் மீது வழக்குகள் உள்ளன. சமாஜ்வாடி கட்சியின் 18, பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே அம்மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களில் 79 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

நாடாளுமன்றத்தை நோக்கி அறுபது டிராக்டர்களில் 1,000 விவசாயிகள்

புதுடெல்லி: இம்மாதம் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரம் விவசாயிகள் பேரணியாகச் செல்வார்கள் என்றும் அதில் 60 டிராக்டர் வாகனங்கள் இடம்பெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். அரசாங்கம் அனுமதிக்கும் சாலைகளின் வழி விவசாயிகள் பேரணி செல்லும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியுள்ளார். விவசாயிகள் சாலைகளை மறிக்கவில்லை என்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சிக்கு தடை இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்த செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. முன்னதாக, இத்தகைய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து பல்வேறு தரப்பினரும் கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆய்வாளர்கள்: இந்தியா பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்

புதுடெல்லி: பருவநிலை மாற்றங்களால் இந்தியா பல்வேறு இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களைச் சமாளிக்க இந்தியா தயாராக வேண்டும் என பருவநிலை ஆராய்ச்சியாளர் ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார். நாட்டின் கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அம்மாவட்டங்களின் புவியியல் அமைப்பே மாறக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பருவநிலை மாற்றங்களால் தென் மாநிலங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஐந்து அனைத்துலக விமான நிலையங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐந்து அனைத்துலக விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, அம்மாநிலத்தின் கௌதம புத்தா நகரில் நொய்டா விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடஇந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் உருவெடுக்கும் என்றும் நாட்டின் ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதலா வது விமான நிலையமாக இது விளங்கும் என்றும் ஆண்டு தோறும் சுமார் 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக விமானச் சேவை: 25 நாடுகளுடன் இந்தியா பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் அனைத்துலக விமானச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்துலக விமானங்களை இயக்குவது தொடர்பாக மத்திய அரசு 25 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.