ஸ்ரீநகர்: வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியவர்களை மத்திய அரசு சும்மாவிடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வங்கியில் கடன் பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாதவர்களை நிதியமைச்சு துரத்தியதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தபோது வாராக்கடன் கவலைக்குரிய அம்சமாக இருந்தது என்றும் அதன் பிறகு அத்தகைய கடன்களை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
"கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி இருந்தாலும் விடவில்லை. அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அவை சட்டரீதியாக விற்கப்பட்டோ, ஏலம் விடப்பட்டோ கிடைத்த பணத்தை வங்கியிடமே திருப்பி ஒப்படைத்தோம்," என்றார் நிர்மலா சீதாராமன்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி மட்டுமின்றி மேலும் பலர் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களின் சொத்துகளை நீதிமன்றத்தின் அனுமதியோடு விற்று, அதன்வழி கிடைக்கும் தொகை வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.