ராஜ்கோட்: திருமணம் நடைபெற இருந்த நாளன்று கல்லூரி தேர்வும் நடைபெற்றதால், மாணவி ஒருவர் மணக்கோலத்துடன் அத்தேர்வை எழுதி முடித்தார். இந்த சுவாரசியமான சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.
ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ஷிவாங்கி பக்தாரியா என்ற அம்மாணவி அங்குள்ள கல்லூரியில் இளநிலை பட்டபடிப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவருக்கும் பார்த் பட்டாலியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமானது.
நவம்பர் 24ஆம் தேதி (நேற்று) திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அதே நாளில் அவரது கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் என்ன செய்வது என முதலில் குழம்பிய ஷிவாங்கி, பின்னர் எப்படியாவது தேர்வை எழுத வேண்டும் என முடிவு செய்தார். தமது விருப்பத்தை அவர் தனது வருங்கால கணவரிடம் எடுத்துச் சொல்ல, மணமகன் பார்த் பட்டாலியாவும் அதற்குச் சம்மதித்தார்.
இதையடுத்து, ஷிவாங்கி தனது தேர்வை எழுதி முடித்த பின்னர், சில மணி நேரம் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்வது என மணமக்களின் குடும்பத்தாரும் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று காலை மணப்பெண் கோலத்தில் தேர்வு மையத்துக்கு வந்தார் ஷிவாங்கி. அதன் பின்னர் அவர் தேர்வு எழுதி முடித்தார். அவருக்காக மணமகனும் மணக்கோலத்துடனே தேர்வு மையத்துக்கு வந்து காத்திருந்தார்.
இதையடுத்து இருவரும் திருமண மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் திருமணம் நடந்தேறியது.

