நிபுணர்கள்: இந்தியாவில் மூன்றாவது அலையால் அதிக பாதிப்புகள் இருக்காது
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்காக தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த 537 நாட்களில் இல்லாத வகையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 111,481ஆக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் 437 பேர் பலியாகிவிட்டனர். இவற்றுள் 370 இறப்புச் சம்பவங்கள் கேரளாவில் பதிவாகி உள்ளன.
அம்மாநிலத்தில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
நேற்று முன்தினம் இந்தியாவில் புதிதாக 9,283 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இவர்களில் சுமார் ஐந்தாயிரம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் அன்றாடம் பதிவாகும் தொற்று எண்ணிக்கையில் கேரளாவின் பங்களிப்பு 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகிறது.
எனினும், நேற்று முன்தினம் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 5,978 பேர் மீண்டுள்ளனர் என்பது ஆறுதலுக்குரிய தகவல். இதுவரை 38,045 பேர் மாண்டுவிட்டனர்.
அம்மாநிலத்தில் விடுபட்ட மரணச் சம்பவங்களை இப்போது பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக அதிகமாக 585ஆகப் பதிவானது.
அதேபோல் நேற்று முன்தினம் பதிவான மரண எண்ணிக்கையில் 57 இறப்புச் சம்பவங்கள் கடந்த சில நாள்களில் விடுபட்டுபோனவையாகும். மீதமுள்ள 313 மரணச் சம்பவங்கள் முன்பே நிகழ்ந்தவை என்றும் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் வகுத்துள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, இப்போது கொரோனா மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு வேளையில், இந்தியாவில் குழந்தை பிறப்பு அதிகமாக இருந்துள்ளது. ஆனால், கேரளாவில் நேர்மாறாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனால் பாதிப்புகள் அதிகம் இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது அலை ஏற்படுமா என்பதைக் கணிக்க இயலாது என்றும் அவ்வாறு அலை ஏற்பட்டால் அது மென்மையானதாகவே இருக்கும் என்றும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் இயற்பியல் பேராசிரியர் சீதாப்ரா சின்கா தெரிவித்துள்ளார்.