புதுடெல்லி: இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கியிருப்பதை அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று 24ஆம் தேதி வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அந்தக் கணக்கெடுப்பின், சராசரியாக பெண் ஒருவர் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை, அதாவது மொத்தக் கருத்தரிப்பு விகிதம் 2.2லிருந்து 2ஆகக் குறைந்துள்ளது.
சராசரியாக, ஒரு பெண் 2.1 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்போது அந்நாட்டின் பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும் சம அளவில் இருக்கும் என்றும் அப்படி இருக்கும்போது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் மாற்றமிராது என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மக்கள்தொகைப் பிரிவு விளக்குகிறது.
இந்நிலையில், பதிலீடு கருத்தரிப்பு விகிதம் இந்தியாவில் 2ஆகக் குறைந்துவிட்டதால், மக்கள்தொகையும் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அளவிலான மொத்த கருத்தரிப்பு விகிதத்தை (டிஎஃப்ஆர்) அந்தக் கணக்கெடுப்பு பட்டியலிட்டுள்ளது. அதன்படி, பீகார் (3), மேகாலயா (2.9), உத்தரப் பிரதேசம் (2.4), ஜார்க்கண்ட் (2.3), மணிப்பூர் (2.2) ஆகிய மாநிலங்களில் இவ்விகிதம் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் 2015-16 காலகட்டத்தில் 1.7ஆக மொத்த கருத்தரிப்பு விகிதம், 2019-21 காலகட்டத்தில் 1.8ஆகக் கூடிவிட்டது.
ஆகக் குறைவாக, ஜம்மு-காஷ்மீரில் இவ்விகிதம் 1.4ஆக உள்ளது.
முதன்முறையாக, இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கணக்கெடுப்பின்மூலம் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு, 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்.
இந்தியாவின் இப்போதைய மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. உலக மக்கள்தொகையில் இது 17.7%.
அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன.