லஞ்சப் புகார்: மூத்த அதிகாரி குவித்த ரூ.100 கோடி; நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல்
பெங்களூரு: கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது லட்சக்கணக்கில் ரொக்கப் பணம், பல கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து பெருவாரியாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில அதிகாரிகள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்கள், இருசக்கர வாகனங்களின் இருக்கைக்குக் கீழ் உள்ள பகுதிகள் என்று பல இடங்களில் ரொக்கப் பணத்தையும் நகைகளையும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அரசுப் பணிகளை மேற்கொள்வதற்கு மாத ஊதியம் பெறும் இந்த அதிகாரிகள், எத்தகைய பணியாக இருந்தாலும் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். மூத்த அதிகாரி ஒருவர் நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.
லஞ்சப் புகார்களின் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து, ஒரே சமயத்தில் 15 அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட 68 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடக மாநில பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் இளநிலை செயற்பொறியாளரான சாந்த கவுடா வீட்டில் நடந்த சோதனையின்போது ஏராளமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் ரொக்கப் பணம் அதிகம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வீட்டுக்கு வெளியே இருந்த குழாய்களைச் சோதனையிட்டபோது, கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அக்குழாய்களில் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கப் பணம் எடுக்கப்பட்டது.
மற்றோர் அதிகாரியான சதாசிவாவின் வீட்டில் இருந்து 1.135 கிலோ தங்க நகைகளும் ரூ.8 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளாண்துறை நிர்வாக இயக்குநர் ருத்திரேஷ் என்ற அதிகாரியின் வீட்டில் ஐந்து தங்கக் கட்டிகள் உட்பட ஏராளமான தங்க நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சொத்து சேர்த்துள்ள வேகம் லஞ்ச ஒழிப்புத்துறையினரை மலைத்துப்போக வைத்தது.
15 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனை நடவடிக்கையில் 408 அதிகாரிகள் ஈடுபட்டனர். லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் வீடுகளுக்கு அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.