செய்திக்கொத்து

2 mins read
2c3ed232-33d7-4bc1-a6fc-7127cc4ae80f
-

டிசம்பர் மாதம் கொரோனா மூன்றாவது அலை: அமைச்சர் கணிப்பு

மும்பை: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை டிசம்பரில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது அலையால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றார். "உயிர்வாயு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கைகளுக்கான தேவை ஏற்படாது என நம்பலாம். மகாராஷ்டிராவில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதனால் நோய்த் தொற்றுப் பாதிப்பும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது," என்றார் ராஜேஷ் தோபே.

மும்பை முன்னாள் காவல் ஆணையர் விசாரணைக்கு நேரில் முன்னிலை

மும்பை: மும்பை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் பரம்பீர் சிங் நேற்று மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவில் நேரில் முன்னிலையானார். அண்மைய சில தினங்களாக அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் காவல்துறை விசாரணைக்காக நேரில் முன்னிலையானதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பணம் பறித்தல், மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு வழக்குகளை பரம்பீர் சிங் எதிர்கொண்டுள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு டெல்லி சட்டமன்றக் குழு அழைப்பாணை

புதுடெல்லி: சீக்கியர்கள் குறித்து தெரிவித்த கருத்து களுக்காக நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெல்லி சட்டமன்றத்தின் அமைதி, நல்லிணக்க குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. சீக்கியர்களை காலிஸ்தான் அமைப்புடன் ஒப்பிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார் கங்கனா. இது குறித்து விளக்கம் கேட்க உள்ளது சட்டமன்றக் குழு. கங்கனாவின் இந்த கருத்து தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.