புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏழை மாநிலங்கள் என்று நிதி ஆயோக் அரசாங்க அமைப்பின் வறுமைக் குறியீடு தெரிவித்துள்ளது.
இந்த மூன்றிலும் பீகார்தான் மிகவும் ஏழை மாநிலம். அங்குள்ள மக்களில் 51.91 விழுக்காட்டினர் வறுமையில் வாடுகின்றனர். அதேநேரம் ஜார்க்கண்ட்டில் 42.16 விழுக்காட்டினரும் உத்தரப் பிரதேசத்தில் 37.79 விழுக்காட்டினரும் வறுமையில் வசிப்பதாகக் குறியீட்டில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
நான்காவது ஏழை மாநிலமாக மத்தியப் பிரதேசம் (36.65% வறுமை), ஐந்தாவதாக மேகாலயா (32.67% வறுமை).
அதேநேரம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வறுமை குறைந்து காணப்படுகிறது. கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%), தமிழ்நாடு (4.89%) மற்றும் பஞ்சாப் (5.59%) என வறுமை குறைந்த மாநிலங்களாகப் பட்டியலிடப்பட்டு உள்ளன.
ஆக்ஸ்ஃபர்ட் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு நடவடிக்கை, ஐக்கிய நாடு அமைப்பின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உலகளவிலான அளவீடுகளின் அடிப்படையில் மாநிலங்களின் வறுமை நிலவரம் கணக்கிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.