புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, போராட்டம் தொடங்கப்பட்ட டெல்லி மாநில எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று முன்தினம் ஒன்றுகூடி, இனிப்புகள் விநியோகித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்த ஏராளமான பெண்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று டெல்லி அருகே உள்ள காஜிபூர் எல்லைப் பகுதியில் கூடியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சமயம் பஞ்சாபி மொழிப் பாடல்களை ஒலிக்கச் செய்து அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நாளை முன்பே அறிவித்தபடி, நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாகச் செல்வர் என்று விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.