புதுடெல்லி: உருமாறிய கொரோனா வகையான 'ஓமிக்ரான்' குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி (படம்) வலியுறுத்தி உள்ளார்.
இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
'ஓமிக்ரான்' என்று குறிப்பிடப்படும் உருமாறிய கொரோனாவால் உலகளவில் பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தீவிர கட்டுப்பாடுகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தொடர வேண்டும் என்றும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று முன்தினம் கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான பொது சுகாதார தயார் நிலை, தடுப்பூசி நடவடிக்கை குறித்து மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையேற்ற பிரதமர் மோடி, 'ஓமிக்ரான்' குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவில் 'ஓமிக்ரான்' தொற்று பரவும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மதிப்பாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தற்போது வெளிவரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளையும் கண்காணித்தல், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையே, உருமாறிய கொரோனா வகையான 'ஓமிக்ரான்' பாதிப்பால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள சில மாநிலங்களில் நிலைமை மோசமடைக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், 'ஓமிக்ரான்' பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று ஆபத்து வெகுவாகக் குறையும் என்றும் அம்மன்றம் கூறியுள்ளது.
இதற்கிடையே, அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
தேவைப்பட்டால் தனிமைப்படுத்துவற்கான பகுதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சின் செயலர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஓமிக்ரான்' பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய தடுப்பூசித் திட்ட ஆலோசகர்: மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புண்டு