செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
59dfe036-4861-4468-a41d-98edf201acb5
-

டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

புதுடெல்லி: காற்றின் தரம் மிக மோசமாக உள்ள போதிலும் டெல்லியில் நேற்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்குச் சென்றனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் நலன் கருதி அவற்றை மேலும் ஒருவார காலம் மூட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

அதிபர்: யோகா அனைவருக்கும் சொந்தமானது, பொருந்தக்கூடியது

டேராடூன்: மதங்களைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் யோகாவைப் பயிற்சி செய்து வருவதாக அதிபர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், யோகா குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் சொந்தமானது என்றார். "யோகா என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடியது. இது நமது மனதையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு பயிற்சியாகும். பிராணாயாமத்தின் மிகச்சிறந்த வடிவமான மூச்சுப்பயிற்சியை ரயில், விமான நிலையங்களில் உள்ள காத்திருப்பு அறைகளில் கூட செய்யலாம்," என்றார் அதிபர் ராம்நாத் கோவிந்த்.

தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அமராவதி: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் நகரும் பட்சத்தில் ஒடிசா, ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திராவில் உள்ள நெல்லூர், சித்தூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் அண்மையில் சாதனை அளவாக ஒரே நாளில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திரைப்பட படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலம்: உத்தரப் பிரதேசத்துக்கு விருது

பனாஜி: இந்தியாவில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கோவாவில் நடைபெற்ற 52வது அனைத்துலக திரைப்பட விழாவின்போது வழங்கப்பட்டது. அதை அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அரசு சார்பில் பெற்றுக்கொண்டார். படப்பிடிப்புக்கான அனுமதி தருவது, பாதுகாப்பான சூழல், பல்வேறு வசதிகள் கிடைப்பது ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

நிதியமைச்சர்: மின்னிலக்கப் பணத்தை மத்திய அரசு அங்கீகரிக்காது

புதுடெல்லி: 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மின்னிலக்கப் பணத்தை மத்திய அரசு அங்கீகரிக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியாவில் மின்னிலக்கப் பணத்தைக் கொண்டு நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை மத்திய அரசு இதுவரை சேகரிக்கவில்லை என்றார் நிர்மலா சீதாராமன்.

மின்னிலக்கப் பணத்தை வைத்து பல்வேறு மோசடிகள் நடைபெறுவதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.