புதுடெல்லி: 'ஓமிக்ரான்' அச்சுறுத்தல் காரணமாக அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவையைத் தொடங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது.
முன்னதாக டிசம்பர் 15ஆம் தேதி முதல் அனைத்துலக விமானச் சேவையைத் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், 'ஓமிக்ரான்' பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன் எதிரொலியாக அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவையைத் தொடங்குவது சற்றே ஒத்தி வைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அனைத்துலக விமானச் சேவையைத் தொடங்கும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் மத்திய சுகாதாரத் துறை, விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என மத்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 'ஓமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கண்டறியப்பட்ட இரண்டு தொற்றுத்திரள்களுடன் தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், கேரளாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் ஒரு வாரத்துக்கு கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 'ஓமிக்ரான்' பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 'ஓமிக்ரான்' பாதிப்பைத் தடுப்பதற்கு மத்திய அரசின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்காமல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதே போல் மேலும் பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
புதுடெல்லி: 'ஓமிக்ரான்' என்று குறிப்பிடப்படும் உருமாறிய கொரோனா வகை தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை குறித்து இப்போதே விவாதிக்கத் தேவை இல்லை என்றும் இந்தியாவில் அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அண்மைய உருமாறிய கொரோனா வகையானது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. இதற்கேற்ப அக்கிருமியின் புரதத்தில் முப்பது உருமாற்றங்கள் நடந்துள்ளன. எனவே இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் செயல்திறனை மறுமதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
மறுமதிப்பீட்டுக்குப் பின்னர் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே எதிர்கால செயல்பாடுகளை தீர்மானிக்க இயலும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலமாக இந்தியாவில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதில்லை என்றும் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது என்றும் கூறி உள்ளார்.