அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அங்கு மொத்தம் உள்ள 334 பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. அவற்றுள் 112 இடங்களைப் போட்டி இன்றி பாஜக கைப்பற்றிவிட்டது.
பின்னர் மீதமுள்ள 222 இடங்களுக்கு கடந்த 25ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதற்காக மாநிலம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலின்போது தங்கள் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாகவும் சிலர் தாக்குதலுக்கு ஆளானதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், துணை ராணுவப்படையை திரிபுராவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இதனால் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில் தேர்தல் நடத்தப்பட்ட 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூன்று இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் ஓரிடத்திலும், மாநிலக் கட்சியான திப்ர மோத்தா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.