புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நாட்டில் ஐநூறாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இதே காலகட்டத்தில் எழுநூறாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தற்போது வரை நாடு முழுவதும் 5,00,506 நிறுவனங்கள் மூடப்பட்டன என்றும் 7,17,049 புதிய நிறுவனங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 22,557 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதே காலகட்டத்தில் 1,09,098 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் 155,377 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் 2019-20இல் இந்த எண்ணிக்கை 122,721ஆக இருந்தது என்றும் இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், 2016-17இல் 97,840 நிறுவனங்களும் 2017-18-இல் 108,075 நிறுவனங்களும், 2018-19இல் 1,23,938 நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்பட்டன என்று அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவாக 2,36,262 நிறுவனங்களும் 2018-19இல் 1,43,233 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

