லக்னோ: இந்து அமைப்புகளின் மிரட்டல் அறிவிப்பையடுத்து மதுரா நகரில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. அங்கு ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் அந்தப் பள்ளிவாசலில் கிருஷ்ணர் சிலை வைக்கப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
அரசின் தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற அந்த அமைப்புகளின் மூன்று முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தியைப் போலவே மதுராவிலும் பிரச்சினை வெடித்துள்ளது. அங்குள்ள கோவில்தான் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அங்கிருந்த பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டு, அதன் பாதி நிலத்தில் கியான்வாபி எனும் பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து, மதுரா விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக மதுரா நீதிமன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் வழக்குகள் தொடுத்துள்ளன.
மேலும், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரா கியான்வாபி பள்ளிவாசலில் கிருஷ்ணர் சிலையை வைக்கப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
மதுராவின் நாராயணி சேனா, அகில பாரதிய இந்து மகாசபா உள்ளிட்ட சில அமைப்புகள் ஒருங்கிணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பால் மதுராவில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரா காவல் கண்காணிப்பாளர் கவுரவ் குரோவர் எச்சரித்துள்ளார்.
மேலும், மிரட்டல் அறிவிப்பை வெளியிட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாராயணி சேனா அமைப்பின் பொருளாளர் அமித் மிஸ்ரா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

