அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் இன்று அறிவிப்பு
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாய அமைப்புகள் இன்று அறிவிக்க உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவது தொடர்பான தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான போராட்டம் குறித்து இன்று அறிவிக்க இருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி ரமணா: நீரிழிவு நோயாளிகளுக்கு மானியம் அவசியம்
புதுடெல்லி: நீரிழிவு நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதுடன் ஏராளமான பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார். எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சைக்காக அரசு ஆதரவு அளிப்பதுடன் மானியம் வழங்க வேண்டியது அவசியம் என்று அவர் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய போது குறிப்பிட்டார். "மேலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகப்படியான மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் 1,500 மணமுறிவு வழக்குகள்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 1,500 மணமுறிவு வழக்குகள் தொடுக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தில் 75 மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 1,500 வழக்குகளில் சுமார் 400 தம்பதியர் காதல் மணம் புரிந்தவர்கள் என்றும் மணமுறிவு கோருபவர்களின் வயது சராசரியாக 23 முதல் 28ஆக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
கொரோனா: 190 ராணுவ வீரர்கள் பலி
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்புப் படையினர் 190 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 137 பேர் தரைப்படையைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். ராணுவத்தின் தரைப்படையில் 45,576 பேருக்கும் விமானப்படையில் 14,022 பேர்க்கும் கடற்படையில் 7,747 பேர்க்கும் கொரோனா பாதிப்பு இருந்தது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

