இந்தூர்: தமது எட்டு வயது மகனை சிறுத்தைப் புலி ஒன்று வாயில் கவ்விக்கொண்டு ஓடுவதைக் கண்ட பெண் அதனை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றார். சிறுத்தையை நெருங்கியதும் அதனுடன் போராடினார் கிரண் பாய்கா என்னும் அந்தப் பெண்.
ஒரு குச்சியை எடுத்து அவர் தாக்கத் தொடங்கியதும் ராகுல் என்னும் அந்தச் சிறுவனை விடுவித்துவிட்டு அந்தப் பெண் மீது பாய்ந்தது சிறுத்தை. அதன் பாதங்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு குச்சியால் ஓங்கியபோதும் சிறுத்தை நகரவில்லை. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராமவாசிகள் ஓடி வருவதைக் கண்டதும் அது அங்கிருந்து தப்பிவிட்டது.
கிரணுக்கும் அவரது மகனுக்கும் கீறல் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவ்விருவரும் மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நியூஸ் 18 இணையச் செய்தி கூறியது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சஞ்சஹ் புலிகள் சரணாலயம் அருகே உள்ள பதிஜாரியா என்னும் கிராமத்தில் நவம்பர் 28ஆம் தேதி இரவு 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

