நடுவானில் பயணி இறந்துவிட்டதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்

நடுவானில் பயணி இறந்துவிட்டதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்

1 mins read
e759f851-5f94-4d2a-8743-52c9e22068d2
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம், நியூவார்க் நகருக்குப் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், மூன்று மணிநேரத்தில் டெல்லிக்கே திரும்பியது.

அந்த விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர் இறந்துவிட்டதே அதற்குக் காரணம்.

விமான நிலைய மருத்துவக் குழுவினர், அந்தப் பயணியை முழுமையாக பரிசோதித்தபின் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

அமெரிக்க நாட்டவரான அந்தப் பயணி, தம் மனைவியுடன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

"டிசம்பர் 4ஆம் தேதி, டெல்லியில் இருந்து நியூவார்க்கிற்குப் பறந்துகொண்டிருந்த ஏஐ-105 விமானம், டெல்லிக்குத் திரும்பியது. ஆண் பயணி ஒருவர் இறந்துவிட்டதே அதற்குக் காரணம்," என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

"வேறு விமானச் சிப்பந்திகளுடன் அதே விமானம் மாலை 4 மணியளவில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த அதிகாரி சொன்னார்.

விமான நிலைய போலிசாரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது.