நாகாலாந்தில் ராணுவம் தாக்குதல்; பொதுமக்கள் 13 பேர் பலி

2 mins read
488d4029-7500-4dca-bd61-7ef92892a162
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினர் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து மாநில முதல்வர், உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். -

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினர் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ, உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோன் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒடிங் வட்டாரத்தில் சனிக்கிழமை இரவு (டிசம்பர் 4) பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பிடிஐ செய்தி நிறுனம் கூறியது.

என்எஸ்சிஎன் (கே) மற்றும் அல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்கள் மோன் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.

அவர்களைக் குறி வைத்து அசாம் ரைஃபிள்ஸ் என்னும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது வேலை முடிந்து வேன் மூலம் வீடு திரும்பிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, அவர்கள் சரமாரியாக சுட்டனர்.

இதில் பொதுமக்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

மியன்மார் எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

நேற்றைய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவு இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.