இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் 'பார்டர்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம் ராம். இவருடைய மனைவியின் பெயர் நிம்பு பாய்.
இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடவும் தங்கள் உறவினர்களைச் சந்திக்கவும் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு முன்பாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அவர்கள் சென்றனர்.
பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடிவெடுத்த அவர்களுக்குச் சோதனை காத்திருந்தது.
அட்டாரி எல்லைக்கு வந்த அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை எனக் கூறி, நாட்டிற்குள் அனுமதிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
செய்வதறியாது தவித்த அத்தம்பதி, அங்குள்ள கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான மூன்று வேளை உணவு, உடை உள்ளிட்டவற்றை அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கொடுத்து உதவி வருகின்றனர்.
கர்ப்பிணியான நிம்பு பாய்க்கு கடந்த 2ஆம் தேதி பிரசவவலி ஏற்பட்டது. கிராம மக்கள் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். நிம்பு பாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிறந்ததால் அதற்கு 'பார்டர்' எனப் பெயர் சூட்டப்பட்டது.


