காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தலையைத் துண்டித்த சகோதரன்

1 mins read
f2df587b-e782-4dc5-b3b4-5700d89be16c
தங்களது குடும்பத்தை அப்பெண் தலைகுனிய வைத்ததால், இந்த ஆணவக் கொலையைச் செய்ததாக குற்றவாளிகள் கூறினர். -

காதல் திருமணம் செய்துகொண்ட தம்முடைய சகோதரியின் தலையை தாயாரின் உதவியோடு துண்டித்து சகோதரன் கொலை செய்த கொடூரம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ஔரங்காபாத் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

அப்பெண் திருமணமாகிச் சென்ற வீட்டில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

துண்டிக்கப்பட்ட அப்பெண்ணின் தலையை அவருடைய தாயாரும் சகோதரனும் அண்டைவீட்டார்களுக்கு உயர்த்திக் காண்பித்தும் அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதும் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தங்களுக்குத் தெரியாமல் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தாயாரும் சகோதரனும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டனர்.

மகளுடைய வீட்டுக்கு இருவரும் ஏற்கனவே இரண்டு முறை வந்து சென்றதால், அவர்கள்மீது அப்பெண்ணுக்குச் சந்தேகம் எழவில்லை. தம் மனைவியுடன் அவருடைய தாயார் தனிமையில் பேச வசதியாக, கணவர் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் ஓடி வந்த அவரையும் மனைவியின் சகோதரர் வெட்ட முயன்றார். ஆனால், அவர் தப்பியோடிவிட்டார்.

இந்தக் கொலை வழக்கில், தாய் ஷோபா, 38, சகோதரன் சஞ்சய், 18, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களது குடும்பத்தை அப்பெண் தலைகுனிய வைத்ததால், இந்த ஆணவக் கொலையைச் செய்ததாக குற்றவாளிகள் கூறினர்.