திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, கேரள விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கம் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் மூன்று பேர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், முதலில் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்படும். இந்நிலையில், அண்மையில் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள தங்க நகைகள், தங்கக் கட்டிகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது மொத்த தங்கத்தில் சுமார் ஒரு கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உயரதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் நடவடிக்கையாக மூன்று சுங்க அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.