புதுடெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் காலமான இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் நல்லுடல் முழு ராணுவ மரியாதையுடன் டெல்லியில் நேற்று எரியூட்டப்பட்டது.
தமிழ்நாட்டின் சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது, குன்னூர் அருகே அது விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தது. இதில் தளபதி, அவருடைய துணைவியார் மதுலிகா உட்பட 13 பேர் மாண்டுபோயினர்.
இதனைத் தொடர்ந்து, திரு ராவத் மற்றும் அவருடைய துணைவியாரின் நல்லுடல்கள் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பிரார் சதுக்க தகனச்சாலையில் நேற்று மாலை இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. 17 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்வில் கிட்டத்தட்ட 800 படை வீரர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக, மகள்கள் கிரித்திகாவும் தாரிணியும் தங்கள் பெற்றோரின் உடல்களுக்கு எரியூட்டினர்.
டெல்லியில் உள்ள முப்படைத் தளபதியின் வீட்டில் பிற்பகல் 2 மணி வரை அவர்களின் உடல்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. அதன்பின், பீரங்கி வண்டி மூலம் இருவரின் உடல்களும் தகனச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
வழிநெடுகிலும் பொதுமக்கள் வீர முழக்கம் எழுப்பி, முப்படைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவெல் லெனைன், பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் ஆகியோர் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை, பூட்டான், நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளின் ராணுவத் தளபதிகளும் திரு ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
விபத்தில் மாண்ட பிரிகேடியர் லிடரின் நல்லுடலும் ராணுவ மரியாதையுடன் நேற்று எரியூட்டப்பட்டது.

