பாட்டுச் சத்தத்திற்காகப் பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக் கொன்றார்
மும்பை: பாட்டுச் சத்தத்தைக் குறைக்க மறுத்த அண்டை வீட்டுக்காரரை அடித்துக் கொன்ற ஆடவரை மும்பை காவல் துறையினர் கைதுசெய்தனர். கடந்த புதன்கிழமை இரவு சுரேந்திர குமார் குனார், 40, என்பவர் தமது குடிசைக்கு வெளியே அமர்ந்தபடி இசைக்கருவியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சைஃப் அலி சந்த் அலி ஷேக், 25, என்பவர் பாட்டுச் சத்தத்தைக் குறைக்கும்படி சுரேந்திராவிடம் சொன்னார். ஆனால், சுரேந்திரா அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷேக், அவரைத் தாக்கி, தரையில் தலையை மோதச் செய்தார். தலையில் இருந்து இரத்தம் மிகுதியாக வெளியேறியதால் சுரேந்திரா தன் நினைவை இழந்தார். இதனையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு வருமுன்னே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறை ஷேக்கைக் கைதுசெய்து, கொலை வழக்கு பதிந்துள்ளது.
பள்ளிச் சீருடையிலும் அரசியல்
ஜெய்ப்பூர்: அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறத்தை ராஜஸ்தான் மாநில அரசு முடிவுசெய்துள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது, 2017ஆம் ஆண்டு பழுப்பு நிறச் சாயலில் பள்ளிச் சீருடையின் நிறம் மாற்றப்பட்டது. அது 'ஆர்எஸ்எஸ்' அமைப்பின் சீருடை நிறம்போல இருப்பதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அடுத்த கல்வியாண்டில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான சீருடை நிறத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைமைத் துவத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மாநில அரசு இவ்வாறு செய்கிறது என்றும் இது மிகவும் அவமானகரமானது என்றும் பாஜக சாடியுள்ளது.
ஓமிக்ரான் பாதிப்பு 25ஆக உயர்வு
புதுடெல்லி: தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வேயில் இருந்து குஜராத் திரும்பிய இருவருக்கு 'ஓமிக்ரான்' கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இந்தியாவில் அப்புதுவகை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆனது. அந்த 25 பேரிடமும் இலேசான அறிகுறிகளே தென்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் 'ஓமிக்ரான்' தொற்றிய ஒன்பது பேரும் அதிலிருந்து மீண்டும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மும்பை மேயருக்குக் கொலை மிரட்டல்
மும்பை: மும்பை நகர மேயர் கிஷோரி பெட்னேக்கரைச் சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ஒரு பெண்ணாக, அதில் உள்ள இழிவான சொற்களைத் தம்மால் படிக்க முடியவில்லை என்று கண்ணீருடன் கூறினார் அவர். அக்கடிதத்தில் பெயர் இருந்தாலும் அது போலியானதாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

