மும்பை: ஓமிக்ரான் தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக மும்பையில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நகரில் நான்கு பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மும்பையில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மகாராஷ்டிரா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அச்சமயம் அம்மாநிலத்தில்தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. இதே போல் ஓமிக்ரான் பாதிப்பு பரவிவிடக் கூடாது என மகாராஷ்டிர அரசு கவனமாக உள்ளது.
இதற்கிடையே தான்சானியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்துவந்த மூன்று வயது குழந்தை உள்பட புதிதாக ஏழு பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
ராஜஸ்தானில் ஒன்பது பேருக்கும் குஜராத்தில் மூவருக்கும் கர்நாடகாவில் இருவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டுள்ள அனைவரிடத்திலும் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் 86 விழுக்காட்டினருக்கு ஒரு தடுப்பூசியேனும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதை நூறு விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

