செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b22b9f9f-ae48-4fb2-81fd-062638f9297c
-

கேரளாவில் மக்கள் பிரதிநிதிகள் 393 பேர் மீது குற்ற வழக்குகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் முன்னாள், நடப்பு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் 393 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான குற்ற வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. மக்கள் பிரதிநிதிகள் மீதான நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிணை நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி ஆர்யன் கான் மனுத்தாக்கல்

மும்பை: தமக்கு விதிக்கப்பட்டுள்ள பிணை நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி உள்ளார். அந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, வாரந்தோறும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என ஆர்யன் கான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் குளித்த ஆசிரியர், ஐந்து மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

அமராவதி: ஆசிரியருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஐந்து மாணவர்களும் அந்த ஆசிரியரும் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நீச்சல் தெரியாத நிலையில், அவர்கள் ஆறு பேரும் ஆற்றின் மையப் பகுதியில் இருந்த குழியில் விழுந்தனர். நீச்சல் தெரியாத காரணத்தால் ஆறு பேரும் உயிரிழந்ததாக குண்டூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

7.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.3 கிலோ தங்கம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூடான் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகினர். அவர்கள் நால்வரும் தங்களது அடி வயிற்றில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக ஆளுநர் குற்றச்சாட்டு

கோல்கத்தா: மனித உரிமைகள் மீறலுக்கு மேற்கு வங்கம் உதாரணமாக இருப்பதாக அம்மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் சாடியுள்ளாா். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எது குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க முடியாத அளவுக்கு மேற்கு வங்க மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "மேற்கு வங்கத்தில் ஆள்பவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அரசியல் அமைப்பு, சட்டத்தின் ஆட்சியில் இருந்து மாநில நிர்வாகம் தொலைவில் நிற்கிறது. இங்கு அரசு அதிகாரிகளும்கூ®ட அரசியல் கட்சித் தொண்டர்கள் போல் செயல்படுகிறார்கள்," என்று ஆளுநா் ஜக்தீப் தன்கா் மேலும் குற்றம்சாட்டி உள்ளார்.

6,000 ரயில் நிலையங்களில் இலவச இணையச் சேவை: அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச இணைய வசதி வழங்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.