புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய ஜனநாயக ஆட்சியின் நான்கு தூண்களாக உணர்திறன், பொறுப்புக்கூறல், பங்கேற்பு, சீர்திருத்த நோக்குநிலை ஆகியவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஜனநாயக நாடுகள், தங்கள் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள மதிப்புகளை வழங்க வேண்டும் என்றார் மோடி.
அமெரிக்க அதிபரால் நேற்று முன்தினம் வாஷிங்டனில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசினர்.
ஜனநாயகத்தை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கும் தொழில்நுட்பத்தின் திறனைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனநாயக சமூகங்களைப் பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்கள், மின்னிலக்க பணம் (கிரிப்டோகரன்சி) ஆகியவை தொடர்பில் உலகளாவிய விதிமுறைகளை வகுப்பதற்கான கூட்டு முயற்சி தேவை என்று குறிப்பிட்ட அவர், எந்த அம்சமும் ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவ வேண்டுமே தவிர, தரம் தாழ்த்தும் வகையில் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதிலும் புதுமையான மின்னிலக்கத் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் இந்தியா தனது நிபுணத்துவத்தைப் உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் இதுகுறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
ஜனநாயக நடைமுறைகளையும் அமைப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.

