புதுடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பை இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் முதல் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவம் பதிவாகி உள்ளது.
அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்தவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இதேபோல் கர்நாடகாவிலும் புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த இருபது வயது இளையர் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய தொற்றுச் சம்பவங்களை அடுத்து, ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஒருவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை மரபணு உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் எத்தகைய பாதிப்பு உள்ளது என்பது கண்டறியப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில மணி நேரங்களும் அதிகபட்சமாக மூன்று நாள்கள் வரையும் ஆகும்.
இந்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பை இரண்டு மணி நேரத்தில் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவியை இந்திய ஆய்வாளர்கள் குழு வடிவமைத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வடகிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிஸ்வஜோதி போர்காகோட்டி இதுகுறித்து கூறுகையில், இந்தப் புதிய கருவியானது தொற்றுப் பாதிப்பை வகைப்படுத்துவதில் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இவரது தலைமையிலான ஆய்வுக் குழுவினர்தான் இந்தப் புதிய பரிசோதனைக் கருவியை வடிவமைத்துள்ளனர்.
"ஆர்சி பிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியின் மூலம் ஓமிக்ரான் பாதிப்பை இரண்டு மணி நேரத்தில் கண்டறிய முடியும். கோல்கத்தாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஜிசிசி பயோடெக், இந்தக் கருவியை அரசு, தனியார் பங்களிப்புத் திட்டம் மூலம் தயாரித்து வருகிறது.
"ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை இந்தக் கருவி எளிதில் கண்டறியும் என்பது பரிசோதனை முறையில் பெரும் முன்னேற்றம் எனலாம்.
"மேலும், இந்த பரிசோதனை
முடிவுகளின் துல்லியத்தன்மை நூறு விழுக்காடாக உள்ளது," என்கிறார் மருத்துவர் பிஸ்வஜோதி போர்காகோட்டி.
ஓமிக்ரான் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவி வடிவமைப்பு

