பானாஜி: திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் கோவாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதையடுத்து கோவா மாநில பெண்களின் ஆதரவைப் பெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி சூடுபிடித்துள்ளது.
கோவா மாநில அரசு ஏற்கெனவே 'கிருஹ ஆதார்' என்ற திட்டத்தின் கீழ், அம்மாநிலப் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கி வருகிறது. இதன் மூலம் அம்மாநிலத்தில் சுமார் 150,000க்கும் மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கோவாவில் ஆட்சியமைத்தால், இந்தத் தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் வராத 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியோ, கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அம்மாநிலப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரசும் தன் பங்குக்கு வாக்குறுதி அளித்துள்ளது.
கிருஹலட்சுமி என்ற திட்டத்தின் கீழ், கோவா பெண்களுக்கு பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 3.5 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயனடைவர் என்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா எம்பி தெரிவித்துள்ளார்.

