மும்பை இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து ஒன்றரை வயதுக் குழந்தை மீண்டுள்ளது.
அண்மையில் நைஜீரியாவில் இருந்து ஒரு பெண் தமது இரு பெண் குழந்தைகளுடன் மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள சகோதரரைக் காண வந்துள்ளார்.
அவரது சகோதரருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவற்றுள் ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது.
இந்நிலையில், இவர்கள் ஆறு பேருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே அண்மையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அனைவருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்றரை வயதுச் சிறுவன் உட்பட மேலும் நான்கு பேருக்கும் தொற்று பரவியது. எனினும் நால்வரிடத்திலும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. நால்வரும் நலமாக இருப்பதாக மாநகர மருத்துவ அதிகாரி லட்சுமண் கோபணே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் ஒன்றரை வயது குழந்தை உட்பட நால்வர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் இருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அண்மையில் பின்லாந்தில் இருந்து வந்த ஒருவர் ஓமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் முழுமையாக குணமடைந்துள்ளதாக மாநகர மருத்துவ அதிகாரி லட்சுமண் கோபணே மேலும் கூறினார்.

