லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் தெய்வச் சிலை என்று பன்னாட்டு கலைப்பொருள்கள் மீட்பு நிறுவனத்தின் நிறுவனரான கிறிஸ் மேரினெல்லோ தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ளது லோக்கரி கிராமம். இங்கிருந்துதான் 'யோகினி' என்று குறிப்பிடப்படும் அந்தப் பெண் தெய்வச் சிலை கடந்த 1980களின் தொடக்கத்தில் மாயமானது.
இந்நிலையில் பிரிட்டன் ஊரகப் பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டின் தோட்டத்தில் இருந்து இந்தச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிறிஸ் மேரினெல்லோ கூறியுள்ளார்.
"அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு மூதாட்டி தனது வீட்டையும் சில விலை மதிப்புமிக்க கலைப் பொருள்களையும் விற்பனை செய்தார். அவற்றுள் யோகினி சிலையும் இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அந்த வீட்டை வாங்கியபோது, தோட்டப்பகுதியில் யோகினி சிலை இருந்ததாகக் கூறினார்," என்கிறார் கிறிஸ் மேரினெல்லோ.
இதையடுத்து தொலைந்துபோன இந்திய கலைப்பொருள்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஜய்குமாரைத் தொடா்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்டுள்ள கிறிஸ், அந்தச் சிலை உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன சிலை என்பதை அவர் உறுதி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
'இந்தியா ப்ரைட் பிராஜக்ட்' அமைப்பின் இணை நிறுவனா் விஜய்குமார், அந்த அமைப்பின் மூலம்தான் இந்தியச் சிலைகளை மீட்டு வருகிறார்.
இந்தத் தகவல்களை அறிந்த பிறகு அம்மூதாட்டி யோகினி சிலையைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கிறிஸ், அதை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
மிக விரைவில் யோகினி சிலை இந்தியாவைச் சென்றடையும் என இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் சுகீஜாவும் தெரிவித்துள்ளார்.

