கௌஹாத்தி: காலஞ்சென்ற காற்பந்து வீரர் மரடோனா கையெழுத்திட்ட கைக்கடிக்காரத்தை திருடிய அசாம் மாநில ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் துபாயில் அரங்கேறியது தெரியவந்துள்ளது.
துபாயில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பாரம்பரிய பொருள்கள் விற்கப்படுகின்றன. அங்கு மரடோனாவுக்குச் சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் மரடோனா கையெழுத்திட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தக் கைக்கடிகாரம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து துபாய் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையின்போது, இந்தியாவைச் சேர்ந்த வாசித் ஹுசைன் என்பவர் அந்தக் கைக்கடிகாரத்தை திருடியது தெரியவந்தது.
எனினும் அவர் இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டதை அறிந்த துபாய் காவல்துறை, இந்திய புலனாய்வுத் துறைக்குத் தகவல் தெரிவித்தது.
இதையடுத்து அசாம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, சிவசாகர் பகுதியில் பதுங்கி இருந்த வாசித் ஹுசைன் கைது செய்யப்பட்டார்.
இத்தகவலை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட கைக்கடிகாரம் மீட்கப்பட்டது மரடோனாவின் தீவிர ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

