27 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 27 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பத்து மாநிலங்களில் அமைந்துள்ள இந்த மாவட்டங்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
ரூ.9,800 கோடியில் ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் தொடக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நதிகளை இணைக்கும் சரயு கால்வாய் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.9,800 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் 14 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 29 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு இருக்கவேண்டிய இத்திட்டம் தாமதப்பட்டதால், இதன் செலவு நூறு மடங்கு அதிகரித்துள்ளது என்று திட்டத்தை தொடங்கி வைத்தபோது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்
கௌஹாத்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் வடகிழக்கு மாநிலங்களில் கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஏழு மாநிலங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

