'நேரடிப் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது' ராஜ்நாத் சிங்: மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிபெறும்

'நேரடிப் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது' ராஜ்நாத் சிங்: மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிபெறும்

2 mins read
175855ca-d4d3-43fb-a667-888365f28e97
-

புது­டெல்லி: இந்­தியா எந்த நாட்­டின் மீதும் போர் தொடுத்­தது இல்லை என்றும் பிற நாடு­க­ளின் ஓர் அங்குல நிலத்­தைக் கூட இந்­தியா ஆக்­கி­ர­மித்­தது இல்லை என்­றும் பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

பாகிஸ்­தா­னு­ட­னான நேர­டிப் போரில் வெற்­றி­பெற்ற இந்­தியா, அந்­நாட்­டு­ட­னான மறை­மு­கப் போரிலும் வெற்­றி­பெ­றும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்­தான் இடையே போர் மூண்­டது. அந்­தப் போரில் இந்­தியா வெற்றி பெற்று ஐம்­பது ஆண்­டு­கள் ஆன­தை­ய­டுத்து, நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் பொன்­விழா கொண்­டாட்­டம் எளிய முறை­யில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்­வில் பேசிய அமைச்­சர் ராஜ்­நாத் சிங், இந்­தக் கொண்­டாட்ட வேளை­யில், முப்­ப­டைத் தள­பதி பிபின் ராவத்தை நாடு இழந்­திருப்­பது வேதனை அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

ஆனால், 1971 போருக்குப் பிறகு பாகிஸ்­தான் தொடர்ந்து இந்­தி­யா­வுக்கு எதி­ராக மறை­முகப் போரில் ஈடு­பட்டு வரு­வ­தா­கச் சாடிய அவர், பாகிஸ்­தான் தூண்டிவிடும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான மறை­முக போரி­லும் இந்­தியா வெற்­றி­பெ­றும் என்­றார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான வெறுப்பு பாகிஸ்­தான் மன­தில் ஆழமாக வேரூன்றி இருப்­ப­தா­க­வும் தனது ராணுவ ஏவு­க­ணை­க­ளுக்­குப் பாகிஸ்­தான் பெயர் சூட்­டி­யி­ருப்­பதை வைத்தே இதை நன்கு அறிய முடி­யும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"கவ்ரி, காஸ்­னவி, அப்­தாலி என்று இந்­தியா மீது படையெடுத்­தவர்கள் பெயர்­க­ளையே பாகிஸ்­தான் தனது ஏவு­க­ணை­களுக்­குச் சூட்­டி­யுள்­ளது. இவர்­கள் பாகிஸ்­தான் நிலப்­ப­ரப்­பின் மீதும் படை­யெ­டுத்­த­வர்­கள் என்­பதை நினை­வூட்­டு­கி­றேன்," என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.

பயங்­க­ர­வா­தத்­தை­யும் சமூக விரோ­தச் செயல்­களையும் தூண்டிவிடு­வ­தன் மூலம் இந்­தியாவை சீர்­கு­லைக்க பாகிஸ்­தான் விரும்பு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், 1971ஆம் ஆண்டு போரின்­போது பாகிஸ்­தா­னின் திட்­டங்­களை முறி­ய­டித்­த­து­போன்று இப்­போ­தும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை வேரறுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை இந்­திய ராணு­வம் மேற்­கொண்டு வரு­கிறது என்­றார்.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போரில் இந்­திய வீரர்­கள் தங்­க­ளது வீரத்தை முழு­மை­யாக வெளிப்­படுத்­தி­ய­தா­க­வும் அது ஒவ்­வொரு இந்­தி­ய­ருக்­கும் பெருமை அளிக்­கிறது என்­றும் ராஜ்­நாத் சிங் குறிப்­பிட்­டார். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போர் என்­பது அநீ­திக்கு எதி­ரா­னது என்று தெரி­வித்த அவர், அந்­தப் போரில் நீதிக்கு வெற்றி கிடைத்­தது என்­றார்.

"அந்­தப் போரின்­போது வெளி­நாட்டு மண்­ணில் இந்தியா தாக்­கு­தல் நடத்­த­வில்லை, வெளி­நாட்­டின் எந்­தப் பகு­தி­யை­யும் இந்­தியா அப­க­ரிக்­க­வில்லை," என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.