போபால்: விவசாயிகள் ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தில் யாருக்கு வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை யாரும் அத்தகைய கோணத்தில் பார்க்கக் கூடாது என்று போபாலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறும் விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவை எனச் சுட்டிக்காட்டினார்.
"வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் முடிவை அனைத்து விவசாயிகளும் வரவேற்று உள்ளனர். இது விவசாயிகளின் மரியாதையை உறுதி செய்திருக்கிறது.
"தற்போது அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பி வருகின்றனர்," என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மேலும் கூறினார். இதற்கிடையே, டெல்லி புறநகர்ப் பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் நாளை மாலைக்குள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

