சஞ்சய் ராவத்: வழக்கு தொடுத்து என் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள்
புதுடெல்லி: பாஜக பெண் தொண்டருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்குகள் மூலம் தமது குரலை ஒடுக்கப் பார்ப்பதாகவும் தம் மீது பொய் வழக்குகளைத் தொடுக்க ஒருதரப்பினர் முயன்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கோவா மாநிலத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் சிதம்பரம்
புதுடெல்லி: கோவா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அம்மாநிலப் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிப்பது தொடர்பாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஆக அதிகமாக, மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவா மக்களையும் அம்மாநிலத்தையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த உதவித்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு 2,100 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கோவா அரசின் கடன் நிலுவை தற்போது 23,473 கோடி ரூபாயாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், ஒப்பீட்டு அளவில் புதுத்திட்டத்துக்கான தொகை குறைவுதான் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுயசார்புள்ள இந்தியாவை உருவாக்க மோடி முன்வைக்கும் மூன்று அம்சங்கள்
வாரணாசி: இந்திய மண் மற்ற உலக நாடுகளில் இருந்து வேறுபட்டது என்று பிரதமர் மோடி கூறினார். புதிய இந்தியா அதன் கலாசாரம் குறித்து பெருமிதம் கொள்கிறது என்றும் அதன் திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். தூய்மை, புதியன உருவாக்குதல், தொடர் முயற்சியும் சேர்ந்தால் சுயசார்புள்ள இந்தியா உருவாகும் என்றார் பிரதமர் மோடி.
மத்திய அரசு: எதிர்வரும் 17ஆம் தேதி காவிரி லேமாண்மை ஆணையக் கூட்டம்
புதுடெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆணையத்தின் புதிய தலைவராக ஹல்தார் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. இம்முறை மேகதாது அணை, காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுவீடனில் இருந்து பெற்றோருக்குத் தெரியாமல் மும்பை வந்த சிறுமி
மும்பை: இன்ஸ்டகிராமில் அறிமுகமாகி 19 வயது மாணவரை நேரில் சந்திக்கும் ஆசையில் 16 வயதுச் சிறுமி சுவீடன் நாட்டில் இருந்து தன் பெற்றோருக்குத் தெரியாமல் மும்பை வந்துள்ளார். இருவரும் இணையம் வழி தொடர்ந்து தகவல் பரிமாறி வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் நெருக்கமானதால் நண்பரை நேரில் சந்திக்கவும் அவருடன் சில நாள்கள் தங்கியிருக்கவும் விரும்பிய அச்சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றுலாப் பயணிக்கான விசாவைப் பெற்று கடந்த நவம்பர் 27ஆம் தேதி மும்பை வந்தடைந்தார். சிறுமியைக் கண்ட மாணவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளனர். இதற்கிடையே, மகளைக் காணாமல் பதறிய சிறுமியின் பெற்றோர் சுவீடன் காவல்துறையில் புகார் அளிக்க, அடுத்தடுத்த விசாரணைகளின் மூலம் அவர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை அவரை நேரில் அழைத்துச் சென்றுள்ளார்.

