மும்பை விமான நிலையத்தில் சுமையேற்றியாகப் பணியாற்றும் ஒருவர், இண்டிகோ விமானத்தின் சரக்குப் பகுதியில் அயர்ந்து உறங்கிவிட்டதால் தவறுதலாக அபுதாபிவரை சென்றுவிட்டார்.
அபுதாபியில் தரையிறங்கிய பிறகே அவர் விமானத்தினுள் உறங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. கடந்த ஞாயிறன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
பின்னர் அவ்விமானம் மும்பை திரும்பியபோது, அவர் மீண்டும் மும்பைக்கு அழைத்துவரப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
"சம்பவம் குறித்து அறிந்துள்ளோம். இதுபற்றி உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. விசாரணை நடந்து வருகிறது," என்று இண்டிகோ விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

