ஏழு வயது மேற்கு வங்கச் சிறுவன் உட்பட இதுவரை 64 பேருக்கு பாதிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏழு வயதுச் சிறுவனும் தெலுங்கானாவில் மூன்று பேருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்கி பிப்ரவரி இறுதிக்குள் நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், தொற்றுப்பரவல் வேகம் கொரோனாவில் டெல்டா வகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், லேசான தொற்று அறிகுறிகள் மட்டுமே காணப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் இக்கூற்றை ஏற்றுக்கொள்வதாக அந்த ஊடகச் செய்தி மேலும் கூறுகிறது.
இந்நிலையில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகளைப் போடுவதே தங்களின் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இதன் மூலம் கடும் நோய் தாக்கத்தில் இருந்தும் உயிரிழப்பில் இருந்தும் மக்களைக் காக்க முடியும் என்றும் கூறியதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் 17 பேருக்கும் டெல்லியில் ஆறு பேருக்கும் குஜராத்தில் நான்கு பேருக்கும் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் செயலிழக்கக்கூடும்
ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசிகளின் திறன் செயலிழக்கும் வாய்ப்புள்ளதாக கொரோனா தடுப்புக் குழுவின் தலைவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். எனவே, தடுப்பூசிகளில் அண்மைய தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்றும் அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார்.
"நாம் ஏற்கெனவே உருமாறிய கொரோனா வகைகளைப் பார்த்துள்ளோம். அவற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறோம். இப்போது ஓமிக்ரான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இருக்கும் தளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாக மாற்றங்களுடன் கூடிய தடுப்பூசியை உருவாக்குகிறோம் என்பது முக்கியம்," என்று வி.கே.பால் மேலும் தெரிவித்துள்ளார்.
விமானச்சேவை எப்போது?
இதற்கிடையே, ஓமிக்ரான் பாதிப்பு எந்தளவில் பரவுகிறது என்பதைப் பொறுத்தே அனைத்துலக விமானச்சேவையை மீண்டும் தொடங்க இயலும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும் என இப்போதே குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த இரு வாரங்களில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவெடுக்க இயலும் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏழு பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள்
இதற்கிடையே, தமிழகத்தில் ஏழு பேருக்கு ஓமிக்ரான் பாதிப்புக்குரிய அறிகுறிகள் தென்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட பரிசோதனைகளில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மரபணு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே பாதிப்பு குறித்து உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

