திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அம்மாநில சுகாதாரத்துறை காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் சில பறவைகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் முடிவுகள் நேற்று கிடைத்ததாகவும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில், அய்மனம், கல்லரா, வெச்சூர் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் உள்ளிட்ட பறவைகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பண்ணைகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் வளர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலப்புழா மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் அழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
தற்போது ஆலப்புழாவின் அண்டை மாவட்டமான கோட்டயத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில், சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இறைச்சி, முட்டைகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் மெத்தனமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

