புதுடெல்லி: அடுத்த ஆறு மாதங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி வெளியாகும் என இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
சிறார்களிடம் கொரோனா தொற்றின் தீவிர பாதிப்புகளை இதுவரை பார்க்கவில்லை என்பது நிம்மதி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தடுப்பூசிகளால் சிறார்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவை பாதுகாப்பானவை. அவற்றின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று ஆதர் பூனவாலா கூறியுள்ளார்.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட விரும்பும் பெற்றோர் அரசின் அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வதற்கு போதுமான தரவுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை வயது வந்தோரில் 55 விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு மைல்கல்லை அடைந்துள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

