செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
266717b1-b1c3-4f9d-98d7-04528d1c89b5
-

32 கோவில்களில் கொள்ளையடித்த 64 வயது முதியவர் கைது

அமராவதி: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 32 கோவில்களில் சாமி சிலைகள், நகைகளைக் கொள்ளையடித்த 64 வயது முதியவரை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது. பகல் நேரங்களில் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதுபோல் கோவிலின் முக்கிய பகுதிகளை நோட்டமிடும் அம்முதியவர், இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பிடிபட்ட

அவரிடமிருந்து 224 கிராம் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.61 லட்சம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, காட்மாண்டு இடையே பேருந்துச் சேவை மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி, நேப்பாளத் தலைநகர் காட்மாண்டு இடையேயான பேருந்துச் சேவை சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று காலை டெல்லியில் இருந்து முதல் பேருந்து காலை பத்து மணிக்குப் புறப்பட்டதாகவும் இரு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேருந்துச் சேவை கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

சிதம்பரம்: பிரதமரை நாடாளுமன்றத்தில் காண்பது மிகவும் அரிது

புதுடெல்லி: பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் காண்பது அரிது என்றும் அவரை வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டும்தான் பார்க்க முடியும் என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். "பிரதமர் மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பெரும் மதிப்பு இருக்கிறது. அதனால்தான் டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தாமல் வாரணாசிக்குச் சென்றுள்ளார்," என்று சிதம்பரம் மேலும் கூறியுள்ளார்.

ஆர்யன் பிணை நிபந்தனை தளர்வு

மும்பை: இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்டுள்ள பிணை நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நிபந்தனையைத் தளர்த்தக் கோரி ஆர்யன் கான் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை பரிசீலித்த மும்பை உயர் நீதிமன்றம், நிபந்தனையைத் தளர்த்தி உள்ளது.

முல்லைப்பெரியாறு: நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிடுவது தொடர்பில் அடிக்கடி இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்யக்கூடாது என கேரள அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இரு மாநில அரசுகளும் வெளியில் இருக்கும் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்றும் எப்போது நீரைத் திறந்துவிட வேண்டும் என்பது கண்காணிப்புக் குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.