மும்பை: சட்டமேலவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் ஆறு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக நான்கு இடங்களைக் கைப்பற்றியது.
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அம்மாநில சட்டமேலவையில் ஆறு இடங்கள் காலியாகின. ஆறு மேலவை உறுப்பினர்களின் (எம்எல்சி) பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்த இடங்களுக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இரண்டு தொகுதிகளில் எந்தவிதப் போட்டியும் இன்றி சிவசேனாவும் பாஜகவும் தலா ஒரு இடத்தைக் கைப்பற்றி உள்ளன. இதேபோல் காங்கிரசும் ஒரு தொகுதியைப் போட்டியின்றிக் கைப்பற்றியது.
மீதமுள்ள மூன்று இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்தல் நடைபெற்ற ஆறு இடங்களில் நான்கு பாஜக வசம் சென்றுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாயிஸ், இந்த வெற்றியானது எதிர்கால வெற்றிகளுக்கு அடித்தளமாக இருக்கும் என்றார். சிவசேனா கூட்டணிதான் மகாராஷ்டிராவில் இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்று அக்கட்சிகள் தெரிவித்து வந்தது நிறைவேறாது என பாஜக நிரூபித்துள்ளது என்றும் தேவேந்திர பட்னாயிஸ் கூறியுள்ளார்.

